Blogs

சென்னையில் ஓர் நாள்

பேருந்து சேட்பட் பாலத்திலிருந்து கீழிறங்கி வலதுப்பக்கம் திரும்பலானது. கண்ணெதிரே ஈகா, அனுஈகா திரையரங்கங்கள் வந்துப்போனது. கண்டக்டர், “கே.எம்.சி எல்லாம் இறங்கு” என்றார். நான் வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் பூந்தமல்லி நெடுஞ்சாலையை பிடித்து செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளைக்காரர் ஒருவர் படம் பிடித்துக்கொண்டிருந்தார், ஒருவர் கூடையில் குப்பைகளை அள்ளி, அந்த கூடையை தலையில் ஏந்தியப்படி வேதனை முகத்துடன், ”என்னையும் ஒரு போட்டோ பிடி” என்றார். அந்த வெளிநாட்டவரும் போட்டோவை பிடித்து 5 ரூபாய் தாளை நீட்டினார், வாங்கியவுடன் திருப்தியடையாத முகத்துடன் சென்றுவிட்டார்.  நின்றுக்கொண்டிருந்த என்னை பார்த்தார் அந்த வெளிநாட்டவர், நான் முகம் திருப்பி கொண்டேன். பக்கத்தில் இருந்தவர்கள், “அவரு தான் போட்டா எடுக்கிறாரு, நீ ஏன் திரும்பிக்கிற” என்று கேட்டார், அதற்கு நான், “படம் பிடிச்சி, பணம் கொடுத்தாங்கனு சொல்லுவாங்க எனக்கு வேண்டாம்” என்றேன். என்னுடைய நெருடலை கண்ட அந்த வெளிநாட்டவர், “வாட்ஸ் யுர் நேம் என்றார்” என் பெயரை சொன்னேன். அடுத்ததாக ஏதோ கூறினார், சற்று புரிந்தாலும், மொத்தமாக புரியவில்லை, பக்கத்திலிருந்தவர்கள் அவர் கேட்க எனக்கு மொழிபெயர்ப்பு செய்தனர். கடைசியாக ”வாட் யூ லைக் டூ ஹேவ்” என கேட்டார். “ஐ லைக் ஐஸ்க்ரீம்” என்றேன் சிரித்துக்கொண்டே, படம் பிடித்து சென்றுவிட்டார்.

பேருந்து வந்தது, அமிஞ்சிக்கரை, அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், என நிறுத்தத்திற்கு பின்னர் மதுரவாயல் வந்தடைந்தது. வீட்டிற்கு சென்றேன். பேருந்து நிலையத்தில் நடந்ததை பற்றி கூறினேன். ”சரி பிரசாத் எங்கே” என்றாள் அம்மா. ”அண்ணாவை யூனிவர்சிடி க்ரௌண்டிலேயே இருக்க சொல்லிட்டாங்க, அவன் இரவு வந்துடுவான். அவனுக்கு ஸ்கௌட்ல டிரைனிங்க் கொடுக்கிறாங்க”. இரவும் கடந்தது அப்பாவும் வந்துவிட்டார், அவரும், ”உன் அண்னன் எங்கே” என்றார், அம்மாவிற்கு சொன்ன அதே பதிலை கூற, அம்மா நான் கண்ட அந்த வெளிநாட்டவர் பற்றி கூற அப்பாவும் சிரித்தார் பின்னர் யோசனையில் இறங்கலானார். ”சரி நான் போய் பிரசாத்தை கூட்டிட்டு வந்துடறேன்”. என்றார், அம்மாவோ, ”நைட் லேட் ஆயிடுச்சினு காலைல அனுப்புவாங்க, காலைல போங்க” என்றார். அப்பாவிற்கு உறக்கமே இல்லை. அதிகாலையிலேயே எழுந்துவிட்டார், காலையில் வீட்டின் அருகில் குரல்கள் கேட்கலாயின, “ஒருவேளை பசங்கள வச்சி ஏதாவது செய்றாங்க போல” என்றார் பக்கத்து வீட்டார் அண்ணனை பற்றி தான் பேசுகிறார்கள். ”ஆனால் உங்க பையனுக்கு தான் இதெல்லாம் தான் பிடிக்குமே வேணும்னே போயிருப்பான்” காலையிலேயே அப்பா என்னை தயார் படுத்தினார். என்னுடைய புத்தகப்பையில் அண்ணனின் துணிகளை அடக்கி, ”நீ க்ரௌண்டிற்கு போன உடனே பிரசாத்த கூட கூட்டிட்டு வந்துடு, நான் வந்திருக்கேனு சொல்லாத” என்றார். சரிப்பா என்றேன்.

அவருடைய சைக்கிளை எடுத்து நடக்கலானார், நானும் பின் தொடர்ந்தேன், அந்த தெருமுனை வரை பள்ளம், பின்னர் மேடு அதன் பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை வரும்வரை நடந்து பின்னர் சைக்கிளில் ஏறிக்கொள்வோம், அவர் சைக்கிள் பெடலை சுழற்றி பின்னர் சைக்கிளின் சீட்டில் அமர்ந்து கொள்வார், சிறிது தூரம் கழித்து, நான் ஓடிபோய் பின் கேரியரில் அமர்ந்துக்கொள்வேன். ஆனால், அவர் காலால் பெடலை சுழற்றுவதற்கும் நான், ‘அப்பா!!’ என்பதற்கும் ஒரே சமயம் ஆனது, அதே வேகத்தில் கீழே இறங்கினார். ”என்னாச்சி” என்றார். ”பிரேயர் பண்ணலையா, பரவாயில்ல” ‘அவர் உன்னை போக்கிலும் வரத்திலும் காப்பார்’ என்று கண்ணைமூடி விட்டு பின் திறந்தார். ‘இல்லப்பா’ என்றேன். நான் தரையை நோக்கி பார்த்தேன், எப்போதும் என்னை அதுபோன்று கண்டிராத என் அப்பா, ”என்னாச்சி பரவாயில்ல அடிக்கமாட்டேன், அம்மா கிட்ட கூட சொல்ல மாட்டேன் சொல்லு” என்றார். எங்கே அம்மாவிடம் மாட்டிவிட்டு தோலை உரிக்க வைத்துவிடுவார் என்று பயந்தேன். பின்னர், குரலை உயர்த்தாமல் என் குரலுக்கு ஈடாக மெதுவாக சரி ’சொல்லு’ என்றார். ”அப்பா, நேத்து நானும் அண்ணனும் ஸ்கூலிலிருந்து வடபழனி பஸ் டிப்போவிற்கு சென்றோம், பேருந்து காலியாக இருந்ததால், சினிமாவை பற்றி பேசிக்கொண்டிருந்தோம், பின் சீட்டிலிருந்த ஒருவரும் சினிமாவை பற்றி எங்களிடம் பேசி விரைவிலேயே பழக்கமானார். பின்னர், வேறொரு பஸ்சை பிடித்து லிபர்டி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இறங்கினோம். மதியமாகிவிட்டதால் மீனாட்சி கல்லூரி எதிரில் இருக்கும் ஓட்டலில் பரோட்டா வாங்கிக்கொடுத்தார். அண்ணனும் அவரும் எதேதோ பேசினார்கள்”, முடிவில், நான் வெளியே வர அண்ணன், ”நீ வீட்டிற்கு போ, நான் சினிமா ஷூட்டிங் பாத்து வந்துடறேன்” என்றான். ”வீட்ல ஷுட்டிங்கிற்கு போனேனு சொல்லாத” என்றான். நான் அப்படியே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பொய் சொன்னேன்.

சிறிது யோசித்தப்பிறகு அப்பா, நான் மாட்டியிருந்த பேக்கை கழட்டி, ”அந்த பழனி கடைல கொடுத்துட்டு வா” என்றார், பழனிக்கடை நெடுஞ்சாலை ஒட்டி இருந்தது, ”நாங்க வந்து வாங்கிக்கிறோம்”, என்று சைக்கிளில் இருந்தவாறே கூறி, என்னை சைக்கிளில் ஏறசொன்னார். கூட்டிசென்றவன் எப்படி இருந்தான் என்று அங்க அடையாளங்களை கேட்டு அறிந்துக்கொண்டார், ”அவருக்கு ஒரு 30 வயசு இருக்கும்பா, தாடி வச்சிருந்தார். ஒல்லியா இருந்தார்”. சைக்கிளை வடபழனி அடைந்தது, வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் செல்லும் சாலையின் முன்னதாக இடதுப்புறமாக இன்னொரு சந்து, வடபழனி முருகன் கோயிலுக்கு அங்கிருந்து சுலபமாக சென்றுவிடலாம். அங்கே சிலர் மின்விளக்கு கம்பத்தில் பழுதுப்பார்த்து கொண்டிருந்தனர். அப்பா சென்னை மாநகராட்சி தெருவிளக்கு துறையில் பணியாளராக பணிப்புரிந்து வந்தார். மற்றும் அந்த துறையை சார்ந்த சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார். அப்பாவை பார்த்தவுடன் வணக்கம் வைத்தனர், பின்னர் அவர்களை தனியாக அழைத்துக்கொண்டு பேசினார், அதில் ஒருவர், அதிர்ச்சியாக கண்களை வெளியே கொண்டுவரும் அளவிற்கு சட்டென்று திரும்பி பார்த்தார். லுங்கி அணிந்துக்கொண்டு இன்னொருவர் வந்தார், அவரும் அப்பாவிற்கு வணக்கம் வைக்கவே, ”சார் இவரு நம்ம யூனியன் பொருளாளர், கொஞ்சம் உதவுங்க” என்றார் அப்பாவின் நண்பர், விஷயத்தை கூறவே, இங்கே தான் ”சார், நடிகர் ஏஜெண்ட் சங்கம் இருக்கு” இங்கே கேட்டு பார்க்கலாம், என்றார், ”என்னப்பா என்ன விஷயம்” என்றார் சங்கத்தின் ஊழியர், அவர் விஷயத்தை கூறவே, ”இதுக்கெல்லாம் நீங்க எதுக்குங்கயா! உதயாவ கேட்டதா சொல்லுங்க” என்றார், ”சரி கொஞ்சம் உதவி பண்ணு” என்றார். உதயா, எங்களுடன் கூட வந்தவரின் மகன், அவர் சினிமா தொழிலில் இருந்தார் அப்படியே கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். அந்தப்பகுதியில் ஒருவன் சைக்கிளில் சென்றான், ஃபங்க் ஹேர் ஸ்டைல், பேகி பேண்ட் என்று ஆளே ஒரு கதாநாயகனை போலவே இருந்தான். ”அந்த பையன் தான் அண்ணாமலைல சின்ன வயசு ரஜினியா ஆக்ட் பண்ணது. ”என்னமோ அவனே ரஜினிகாந்துனு நினைப்பு”. என அருகிலிருந்தவர் கூறினார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் இன்னொருவரை அனுப்ப, அவருடன் சேர்ந்து என் வயது பிள்ளைகளும் வந்தனர், புதிய உடைகள், ஸ்டைலான ஹேர் கட்கள், ஸ்போர்ட்ஸ் ஷூக்களென நான் வெறுத்து போகின்ற அளவிற்கு வந்தனர், என்னங்கண்ணா, கூப்பிடீங்களாமே, என்றார் அவருடன் வந்த அந்த பிள்ளைகளின் பயிற்சியாளர், ”ஒரு உதவி வேணும்”, என்றார் ஊழியர் ”சார்” என்று அப்பாவை அழைத்து ”இதில உங்க பையன் இருக்கானா” என்று கேட்டார், அதற்கு அப்பா, ”ஏன்டா உங்களுக்கெல்லாம் ஸ்கூலே இல்லையா” என்றார், அதற்கு அவர்கள் ”இன்னிக்கி லீவு, நீங்க ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க” என்றான் ஒருவன், ”டேய்” என்று அவர்களை கூட்டிவந்த பயிற்சியாளர் அதட்டினார். ”இதில என் பையன் இல்ல சார்” என்றார் அப்பா. ”அண்ணே இங்க கொஞ்சம் ரிஹர்ஸல் பார்த்துக்கிறேன்னே” என்றார் பயிற்சியாளர். அதற்கு அந்த அலுவலக ஊழியர் அனுமதிக்கவே வந்த என் வயது பிள்ளைகளும், க்ரூப் டான்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டனர். என் மனதில் அவர்கள் ஆடும் ஆட்டத்தில் நானும் கலந்துக்கொண்டு ஆடுவதாக கற்பனை செய்துக்கொண்டேன். அந்த அலுவலக ஊழியர், யார் யாருக்கோ அழைப்புகள் விடுத்தார், ”சார்” என்றார், அப்பாவும் திரும்பினார், ”சார், 3 ஷூட்டிங் நடக்குது, பிரசாத் ஸ்டூடியோல ஒன்னு, ஏவிஎம்ல நடக்கவிருந்த ஷூட்டிங் கான்சல் ஆயிடிச்சி, கே.டி. குஞ்சுமோன் அவரு ஒரு படம் எடுக்கிறாரு, அந்தப்படத்துக்கு இன்னிக்கு ஷூட்டிங்கானு தெரியல, இன்னொரு ஷூட்டிங் அது டிவி ஷூட்டிங்க் குன்றத்தூர்ல நடக்குது”. அப்பாவோ, ”விஜயா வாஹினி, மாடர்ன் தியேட்டர்ஸ்” என்றார், ”என்ன சார் நீங்க ரொம்ப பழைய ஆளா, விஜயா வாஹினில இப்பெல்லாம் கல்யாணம் தான் சார், மாடர்ன் தியேட்டர்ஸ எப்போவோ இழுத்து மூடிட்டாங்க. இப்ப இருக்கிறதெல்லாம் ஏவிஎம்மும், பிரசாத் ஸ்டூடியோஸ் தான். அப்போல்லாம் இண்டோர் ஷூட்டிங்க் அதிகம், இப்போ அவுட்டோர் தான் அதிகம்.” பிரசாத் ஸ்டூடியோவை நெருங்கினோம், நவரசநாயகன் ஒரு தொப்பியை போட்டு கொண்டு செயற்கை மழையில் நனைந்துக்கொண்டிருந்தார். ”சார் இன்னிக்கு சின்ன பசங்களுக்கெல்லாம் இங்க ஷுட்டிங்க் இல்லசார்”, என்றார் ஏஜெண்ட். ”நீங்க சொல்றதப்பார்த்தா, குன்றத்தூருக்கு தான் போயிருப்பான், அந்த ஷூட்டிங்குக்கு ஏஜெண்ட் இருக்காறானு தெரில”. கே.டி.குஞ்சுமோன் அலுவலகத்திற்கு நெருங்கினோம், ஒரு பேருந்து, முழுவதுமாக கண்ணாடியால் இழைக்கப்பட்டிருந்தது. இப்படியொரு பேருந்தா?, அதன் இருபுறமும் நிற்குமளவிற்கு சிறிது இடம் வைத்திருந்தார்கள். அப்பப்பா என்ன ஒரு கற்பனை வளம், அப்பா என்னை கோபமாக பார்த்தார். என்னால் அந்த பேருந்தை விட்டு என் கண்களை அகற்ற விருப்பமேயில்லை. தயாரிப்பாளர் அலுவலகத்தில், செந்தமிழ் பாட்டு கேடயம் இருந்தது பிரபு இரு கரங்களை நீட்டி சிரித்துக்கொண்டே பாடுவதாக இருந்தது. அங்கேயும் ஷூட்டிங்க் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கேட்டறிந்து பின்னர் மறுபடியும் நடிகர் ஏஜெண்ட் சங்கத்திற்கு பயணிக்கலானோம். ”சார் உங்கப்பையன் குன்றத்தூர் ஷூட்டிங்கிற்கு தான் போயிருக்கனும். இந்த பையன் சொல்ற அடையாளத்த பார்த்தா, ஜானினு ஒருத்தரு சாப்பாடு எடுத்து கொடுக்கிறவரு அப்பப்போ ஷூட்டிங்கிற்கு ஆள் சேர்கிறாரு அவராதான் இருந்திருக்கும். அதிகமா அவரு சாலிகிராமத்தில பழைய வீட்டில சினிமாக்காரங்கெல்லாம் குடியிருக்கிறாங்க, அங்கதான் இருந்திருக்கணும், அங்க போய் பாருங்க” என முகவரி அளித்தார். அந்த வீட்டிற்கு சென்றோம், அந்த வீட்டில் சினிமாவிற்கு பின்னால் வேலை செய்யும், லைட் மேன்கள், எலக்ட்ரிஷியன்கள் போன்ற தொழில்நுட்ப உதவியாளர்கள் அறை எடுத்திருந்தார்கள், மிகவும் பழைய வீடு, சீமை ஓடு, நடுவில் வெளிச்சம் படுமளவிற்கு பெரிய இடம், அதில் அவர்கள் குளிப்பதும், துணிதுவைப்பதுமாக இருந்தனர். ”சார், நீங்க சொல்றத பார்த்தா காலைல ஜானி ஒரு சின்ன பையன கொண்டுவந்தான். அவனாத்தான் சார் இருக்கும், மணி இப்ப 4 ஆவுது, நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க, நீங்க இப்போ குன்றத்தூர்க்கு போய் பார்க்கிறதுக்குள்ள அவங்க இங்க திரும்பி வந்துட்டாங்கனா, அப்புறம் உங்களுக்கு தான் பிரச்சனை”. ”அப்படினா இந்த பையனை இங்க விட்டுட்டு குன்றத்தூருக்கு போறேன்” என்றார், பின்னர் ஏனோ வேண்டாம், ”அவர்கள் வரும்வரை காத்திருக்கிறேன்” என்றார். மணி எட்டானது, நேற்றுக் கண்ட அதே மனிதர், வியர்வையுடன் கையில் சாப்பாடு கேரியருடன் இறங்கினார், அவரின் பின்னால், அவனேதான், அண்ணன் சிரித்துக்கொண்டே வந்தான். வந்ததும் என்னை பார்த்து ”பரவாயில்லையே, கண்டுப்பிடிச்சி வந்துட்டீங்க” என்றான். அப்பாவிற்கு கோபம் அதிகமாகவே வந்தது. அந்த வீட்டில் குழுமியிருந்தவர்கள், அப்பா சண்டைப்போடுவதற்கு முன்னதாகவே, அந்த ஜானியை திட்ட ஆரம்பித்தனர். ”அப்பா அம்மாவிற்கு தெரியாம நீ எப்படிடா அந்த குழந்தைய கூட்டிட்டு போவ, சினிமாக்காரங்க மரியாதையே கெடுத்துட்டியே பாவி”. ”அவரு போலீஸ்க்கு போயிருந்தா நம்ம கதி என்ன ஆயிருக்கும், போய் கம்பி எண்ண வேண்டியதுதான்”. ”ஒழுங்கு மரியாதையா அவங்க பையன அவருக்கு ஒப்படைச்சிடு”, என்றார் இன்னொருவர். அந்த வீட்டில் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. அப்பாவும் திகைப்படைந்தார், மகனை அனுப்பாமல் அவர்கள் வேறுவிதமாக நடந்துக்கொள்வார்கள் என நினைத்தாரோ என்னவோ, அவர்களின் திட்டுகளும், பேச்சும், நடவடிக்கையும் சற்றே ஆறுதல் அளித்தது. ”சார் நான் போலீஸ்கெல்லாம் போகல, என் பையன இவரு கூட இனி நான் பார்க்ககூடாது”. அண்ணனை பார்த்து அவர்களும், ”இவன் சினிமா நடிக்க கூப்பிட்டான் சரி, சினிமான்னு சொல்லி உன் கண்ணு கிட்னி எடுத்துட்டாங்கனா உங்க குடும்பத்துக்கு யாரு பதில் சொல்வா” என இடித்துரைக்கலானார் இன்னொரு பெரியவர். அப்பாவும் பெரியவர்களும் சிறிது நேரம் போலீஸ், சட்டம், போன்ற சமாச்சாரங்களை பேசலானார்கள். அண்ணனிடம், ”சினிமா ஷூட்டிங்கா” அது என்றேன், ”இல்லடா, அது டீ.வி. ஷூட்டிங்க்”, ”டீவி ஷூட்டிங்க்னா கேமரா நம்ம அத்தை கல்யாணம் ஆகும்போது வீடியோ காமிரா எடுத்தாங்களே அதுமாதிரியா” என்றேன், ”இல்லடா, அதுவும் சினிமா ஷூட்டிங்க் மாதிரி தான் இருக்கும் டைரக்டர் தான் பெரிய ஆளு, அவரு சொல்றத தான், எல்லோரும் கேட்கணும்”, ”யாருடா அந்த டைரக்டரு”, ”அவரும் புதுசாம்டா” ”பேர சொல்லு”, ”ரமேஷ் கண்ணா”, ”ஓ அப்படியா, அப்ப யாரு, ஹீரோ” ”புது ஆளு, விவேக் அப்படினு அவரு காரு வச்சிருந்தாரு அவருகூட போனேன், ரொம்ப சகஜமா பேசினாரு, எனக்கு சாக்லெட்லாம் வாங்கி கொடுத்தாரு. ஹீரோனு ஒரு பந்தாவும் இல்ல. அவங்க டைலாக் சொல்ல சொல்ல எனக்கு சிரிப்பு தாங்கல, ஷூட்டிங்க்ல இருந்தவங்கல்லாம் நான் சிரிக்கிறத பார்த்து அவங்களும் சிரிச்சிட்டாங்க. புதுசு என்றதால்ல என்ன மன்னிச்சிட்டாங்க”. ”டிவி பிரோக்ராம் பேரு என்ன?” ”டாப் டக்கர்”. ”அப்படின்றது ஒரு பேரா”, ”ஆமாண்டா”.

அப்பா அந்த இடத்தை விட்டு சைக்கிளில் முன்னும் பின்னுமாக எங்களை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். அண்ணனின் அழுக்கு துணியை கண்ட அம்மா ”என்னங்க காலையிலேயே துணி அனுப்பி வைச்சேனே”, என்றாள். அப்பா, அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். பின்னர் ”பசங்க பசியில இருப்பாங்க சாப்பாடு போடு”, ”அம்மா காலையிலிருந்து சாப்பிடவே இல்லமா”, என்றேன், அண்ணனோ ”மதியானம் நல்ல சாப்பிட்டேன்” என்றான். அம்மா என்னையும் அப்பாவையும் பார்த்தாள். நாங்கள் சாப்பிட்ட பின்னர், அம்மாவை ஓரமாக அழைத்துக்கொண்டு நடந்ததை கூறினார். அப்பாவின் அலுவலக சிப்பந்தி என்னை எப்படி பார்த்தாரோ, அதே போல அம்மாவும் திறந்த கண்களுடன் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள். உன்னை எவ்வளவு நம்பினேன் என்ற கண்ணீர் அவளின் கண்களோடு நின்று விட்டது. அதன் பின்னர் அண்ணனும், இரண்டொரு முறை ஷூட்டிங்கிற்கு செல்ல முயன்றான், ஜானியும் எங்கள் வீட்டிற்கு வந்து அண்ணனை ”ஷூட்டிங்கிற்கு அழைத்துசெல்லவா” எனக்கேட்கவே அம்மாவிடமிருந்து திட்டுகள் விழுந்ததுதான் பாக்கி. அதன் பின்னர், சினிமா ஷூட்டிங்கிற்கும் எங்களுக்கும் அதிகமாகவே விரிசல் ஏற்பட்டது. அம்மா எப்போதும் அவருடைய அண்ணன் சினிமாவிற்கு ஸ்டில்ஸ் கேமிராமேன் என கூறுவதுண்டு, நானும் ”என் அண்ணன் நடிகன்” என கூறிக்கொண்டிருக்கிறேன்.

No comments

XML response sample: HTTP/1.1 200 OK Content-Length: 0